7.10.2022 அன்று ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்திலுள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ்நாட்டின் சென்னை அருங்காட்சியகத்திற்கும் லிண்டன் அருங்காட்சியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2020 ஆம் ஆண்டில் இப் புரிந்துனர்வு ஒப்பந்தம் தொடர்பான முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கியது. சென்னை அருங்காட்சியகத்திற்கும் ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்திற்குமான ஆய்வு மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பகிர்தல் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சில சந்திப்புக்கள் சென்னை அருங்காட்சியகத்திலும் அதன் பின்னர் இடைக்கிடையே இணையவழி ஜூம் வழி சந்திப்பாகவும் கடிதம் வழியாகவும் கலந்துரையாடல் நிகழ்த்தினோம். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையிலான பணிகளை ஒருங்கிணைக்கும் பாலமாக ஆரம்பம் முதல் செயல்பட்டோம் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றோம். எங்களுக்கு உறுதுணையாக வழிகாட்டுதலை வழங்கிய தமிழக முதல்வரின் செயலர் டாக்டர்.சண்முகம் ஐஏஎஸ் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இந்த முயற்சியைத் தொடக்கம் முதலே ஆர்வத்துடன் நெறிபடுத்தியதுடன் நேரில் வந்திருந்து சிறப்பித்த தமிழக தொழில்துறை, தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கு நன்றியையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு