பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் இதழ்கள்
பண்டிதர் அயோத்திதாசரின் தமிழன் (ஒரு பைசாத் தமிழன்) இதழ்கள்: 1907–1914
சென்னை இராயப்பேட்டையில் இருந்து ஜூன் 19, 1907 முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஓராண்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 26, 1908 முதல் ‘ஒரு பைசாத்’ நீக்கப் பெற்று ‘தமிழன்’ என்ற பெயரோடு வெளிவந்தது.
இந்த இதழ் வெளிவருவதற்கானத் தேவையையும் யாருக்கானது என்பதையும் பண்டிதர் தன் இதழில் விளக்கியிருந்தார்:
“உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை “ஒரு பைசாத் தமிழன்” வெளியிட்டிருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்ததினை ஆதரிக்கக் கோருகிறோம்” என்று அறிவித்தார்.
இதழின் முகப்பில் நேர்த்தியாக இதழின் சின்னமும் இருந்தது. ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் ‘ஜெயது’ என்றும் வலப்புறம் ‘மங்களம்’ என்றும் நடுவில் ‘நன்மெய்க் கடைபிடி’ எனவும் எழுதப்பட்டு , இருபுறமும் மலர்க் கொத்துகள் அலங்கரித்தன.
தமிழன் இதழ்களில் மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணிய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். ‘யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’, ‘வேஷ பிராமண வேதாந்த விவரம்’, ‘ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு’, ‘விபூதி ஆராய்ச்சி’ போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார்.
சமூக நீதி, சமூக மதிப்பீடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநிதித்துவ அரசியல், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கொள்கை தொகுப்பை வழங்கியது தமிழன் இதழ்.
சிறப்பாக மகளிர் பகுதியில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம்பெற்றன.
பொதுச் செய்தி பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் போன்றவை இடம்பெற்றன.
தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.
இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்றால் அது மிகையன்று.
நூறாண்டுகளுக்கு முந்தியதான “ஒரு பைசாத்தமிழன்” என்ற ஒரு வார இதழின் இரண்டு மூன்றாண்டு இதழ்களின் தொகுப்புகளை இங்கு பெறலாம்…
வார இதழ்: ஒரு பைசாத்தமிழன்
வார இதழின் ஆசிரியர்: அயோத்திதாசப் பண்டிதர்
I
ஒரு பைசாத்தமிழன் – 1
ஜூன் 19, 1907 – முதல் – மார்ச் 3, 1909 வரை
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின் முதல் பகுதி.
[முதல் பகுதி – 480 பக்கங்களைக் கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு]
II
ஒரு பைசாத்தமிழன் – 2
மார்ச் 10, 1909 – முதல் – ஆகஸ்ட் 9, 1911 வரை
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வெளிவந்த ஒரு பைசாத்தமிழன் வார இதழின் மின்னாக்கப் பதிவின்
[இரண்டாவது பகுதி – 974 கொண்ட ஒரு வார இதழ் தொகுப்பு]
இந்த இதழ்களை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: பாரி செழியன்
மின்னாக்கம், மின்னூலாக்கம்: பாரி செழியன், அயோத்தி தாசர் ஆய்வு நடுவம், மதுரை
மதுரை அயோத்தி தாசர் ஆய்வு நடுவகத்திற்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி!