அன்புள்ள நண்பர்களே:

எனது சமீபத்திய முதுசொம் வேட்டையில் கிடைத்த பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்தியாவிற்கு அடுத்தபடி நமது முதுசொம் பெருமளவில் உள்ள இடம் இங்கிலாந்துதான். அரசியல் காரணங்களுக்காக இந்தியாவிலிருந்தும் பிற காலனிகளிலிருந்தும் புத்தகங்களை எடுத்து வர, அது இப்போது ஒரு மரபாகவே ஆகிவிட்டது அங்கு. சுதந்திர இந்தியாவிலிருந்து பல தமிழ் புத்தகங்கள் இன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. முன்பு தன்னிச்சையாக எடுத்து வரப்பட்டது, இப்போது காசு கொடுத்து வாங்கப்படுகிறது, வித்தியாசம் அவ்வளவே.

கி.பி.1600லிருந்து கி.பி.1947வரை இந்தியாவிலிருந்து வந்த புத்தகங்கள், ஓவியங்கள் போன்றவை 'இந்திய அலுவலகம்' என்ற இடத்தில் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அங்கத்தினருக்கு (மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள்) இலவசமாக வாசிக்க கொடுக்கப்படுகின்றன. அங்கத்தினர் கட்டணம் என்பது கூடக்கிடையாது. அங்கத்தினர் விரும்பினால் அனுமதி பெற்று புத்தகங்களை கணினிப் பதிவாக்கிக்கொள்ளலாம். புத்தகங்களின் படிகளை காகிதப் பிரதிகளாகவோ, மைக்ரோ பிலிம் பதிப்பாகவோ அல்லது இலக்கப் பதிவாகவோ விலை கொடுத்து வாங்கமுடியும். ஏறக்குறைய 4000 தமிழ் புத்தகங்கள் கி.பி 1800 களிலிருந்து கி.பி 1947 வரை சேகரிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களின் பட்டியல் இணையம் மூலமாக காணக்கூடியதாகவும், வேண்டிய புத்தகங்களின் பிரதிகள் இணையம் மூலமாகவே விலை கொடுத்து வாங்கக்கூடியதாகவும் அமைந்துள்ளன. அதன் முகவரி:http://www.blpc.bl.uk

பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து புத்தகங்களை தொடர்ந்து முதுசொம் காப்பகத்தில் ஏற்றுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆர்வமுள்ளவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ளலாம்.

மதுரைத் தமிழ் சங்கத்தின் ஆய்வு ஏடான 'செந்தமிழ்' என்ற இதழின் ஒன்பதாவது தொகுப்பில் கிடைத்தது 'பாண்டியம்' என்ற பெயரிட்ட ஒரு கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியர் திரு.நாராயணன் இந்திய மொழிகள் அனைத்தையும் இலகுவாக எழுதும் வண்ணம் ஒரு வரிவடிவத் திட்டத்தை அளிக்கிறார். இது வெளிவந்த வருடம் 1911. இவ்வெழுத்துக்களால் ஆங்கிலத்தையும் அதன் சுய ஒலி வடிவம் சிதையாமல் எழுதமுடியும் என்கிறார் ஆசிரியர். பிற மொழிகளில் காணும் ஒலிகளுக்கு இங்கு இடமில்லையெனில் சேர்த்துக் கொள்ள மனமிருப்பதாகக் கூறிச் செல்கிறார்.

தமிழ் எழுத்துச் சீர்மை என்பது இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பரவலாகப் பேசப்பட்டு தமிழக அரசு சில மாற்றங்களைக் கொண்டுவந்தும் இருக்கிறது. வரிவடிவ மாற்றம் என்பது தமிழுக்குப் புதிதல்ல. சங்கம் தொடர்ந்து மாறிவரும் தமிழைக் கீழ்க்காணும் பக்கத்தில் காணலாம். http://www.tamil-heritage.org/kural/scriptev.html. அதன் தொடர்ச்சியாகவே திரு.நாராயணனின் முயற்சியைக் காணவேண்டும்.

இன்று கணினி விசைப்பலகைத் திட்டங்கள் தீவிர அலசல்களுக்குள்ளாகி தமிழக அரசால் செந்தரமாக்கப்பட்ட விசைக் குறியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 'யுனிகோட்' என்னும் அகில உலகக் குறியீட்டிற்கு தமிழ் தயாராகிக் கொண்டிருக்கிறது. இக்குறியீடு அனைத்து இந்திய மொழிகளையும் உள்ளடக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. ஆயின் இந்திய அரசின் ஏற்பிற்குள்ளான திட்டத்தில் தேவநாகரி முறை முன்வைக்கப்பட்டுள்ளது. பாண்டியம் என்று திரு.நாராயணன் 1911-ல் முன் வைக்கும் இந்த அமைப்பு தமிழ் நெடுங்கணக்கைக் கணக்கில் கொண்டு அமைந்துள்ளது. பாண்டியம் என்ற தென் தமிழ்நாட்டுப் பெயர் 'பண்டு' என்று பழமையைக் குறிக்கும் வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. அந்த அளவில் கணினிக் குறியீட்டிற்கும் ஒரு தொன்மையான வரலாறு இருப்பதை இக்கட்டுரை சுட்டுகிறது.

எழுத்துச் சீர்மை, விசைப்பலகைக் குறியீட்டின் சரித்திரம் எழுதப்படும் போது இக்கட்டுரை விடுபட்டுப் போகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இக்கட்டுரை முதுசொம் காப்பகத்திற்கு வருகிறது. இதை வாசித்து தமிழ் அறிஞர்கள் பல்வேறு தமிழ் மடலாடற்குழுக்களில் கருத்துக் கூறுவார்கள் என்று நம்புகிறேன்.

நமது நூலகம் வாழும் ஒரு கலை. அது வளரட்டும்.

அன்புடன்,
கண்ணன்
[25 December 2002.]
To Pandiyam |Back to Index (eBooks)

Courtesy:
Digitization:Dr.N.Kannan
E-Book preparation:Dr.N.Kannan
Special thanks to:Mrs.Nalini Persad, British Libaray, LondonDesigned by: Suba:- Copyright THF