அன்புள்ள சுவடியரே:

எனது சமீபத்திய முதுசொம் வேட்டையில் கிடைத்த பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

முதுசொம் என்ற அழகான சொல்லை இங்கு அறிமுகப்படுத்திய பெர்லின் நண்பர் சுசீந்திரனுக்கு நன்றி. இந்தப் பயணத்தில் பலருக்கு இந்தப் பெயர் பிடித்திருப்பது தெரிந்தது.

சென்னையிலுள்ள கீழத்திய சுவடி நூலகத்திற்கு கடைசியாகப் போகலாமென்று முதலில் எண்ணினேன். காரணம் அது அரசினர் கீழத்திய சுவடி நூலகம் என்பதுதான். வரவேற்பு அப்படித்தான் இருந்தாலும் காப்பாளர் முனைவர். சொளந்திரபாண்டியன் இளகக்கூடியவராக இருந்தார். நான் கேட்ட புத்தகங்கள், சுவடிகள் இவைகளை தேடி எடுத்துத்தருவதிலும், சில பல நல்ல யோசனைகள் சொல்லியும் நமது தேடுதலை மேம்படுத்தினார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறாவிடில் நான் பிரம்மராட்க்ஷசனாகப் பிறப்பேன் :-)

இந்த நூலகத்தில் நான் தேட நினைத்தது அறிவியல் சுவடிகள்தான். ஆனால் என்னை இரண்டு பயணத்திலும் ஆட்கொண்டு, வழி நடத்தும் 'தென் குருகூர் ஏறு' சடகோபன் தனது 'நம்மாழ்வார் திருத்தாலாட்டு' என்ற நூலையும், என்னையும் ஒரு பொருட்டாகக் கொண்டு ஆட் செய்யும் கோதை நாச்சியாரின் திருத்தாலாட்டையும் முனைவர் சொளந்திரபாண்டியன் வழியாகக் காண்பித்துக் கொடுத்தார்.

நான் மதுரைத் திட்டத்தில் வெளியிட்ட கோதை நாச்சியார் தாலாட்டில் விட்டுப்போன பல கண்ணிகள் இந்தப் படியில் கிடைக்கப் பெற்ற மகிழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும் போது...

நண்பர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இந்த 'எக்காலக் கண்ணி' என்ற அற்புதமான நூலைக் கண்டுபிடித்தார். இந்த நூல் நூலகத்திலுள்ள சுவடியிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டது. இந்த அற்புத நூலைத் தந்தவர் யாரென்று தெரியவில்லை (நாம் பெயருக்கு அடித்துக் கொண்டு இருக்கிறோம் :-) இவர் தாயுமாகி நம்மை அனுகிரஹிக்கும் தாயுமானவராகக்கூட இருக்கலாம்.

இந்த நூலை வாசித்து அனுபவிப்பதுடன் நில்லாமல் இது பற்றிப் பேசுங்கள். மரபு என்பது பேசப்படும்போது, எழுதப்படும்போது, நிகழ்விக்கும்போதுதான் வாழ்கிறது. மதுரைத் திட்டமும், முதுசொம் அறக்கட்டளையும் ஒரு நூலகத்தைப் பெயர்த்து இன்னொரு வடிவில் வைக்கும் வேலை மட்டுமல்ல. கோயிலின் அழகு அதன் வழிபாட்டில்தான். நமது மரபுச் செல்வங்களும் அவ்வாறே. எனவே ஒவ்வொரு நூலும் வரும்போது அதுபற்றி இக்குழுவில் பேசுங்கள். மற்றக் குழுக்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். அப்போதுதான் பாரதி சொல்வதுபோல் 'வாழ்க தமிழ்மொழி, வாழ்க நிரந்தரம்' என்பது பலிக்கும்.

இந்த நூலை மதுரைத் திட்டத்திற்கு யாராவது எழுத்து வடிவில் கோண்டுவர நினைத்தால் தயவுசெய்து செய்யுங்கள். ஏடு திருத்த முன் எப்போதும் இல்லாத வசதி இப்போது கிடைத்துள்ளது! மூலம் எல்லோரும் பார்க்கும் வண்ணம் நமது வலைத்தளத்தில் 24 மணி நேரமும் கிடைக்கும்!!

நமது நூலகம் வாழும் ஒரு கலை.

அன்புடன்,
கண்ணன்
[29 March 2002.]
Introduction |Back to Index

Courtesy:
Digitization:Dr.N.Kannan
E-Book preparation:Ms.Subashini Kanagasundaram
Special thanks to:1) Dr.S.Soundara Pandiyan, A Curator, Government Oriental Manuscripts Library, Chennai 2)Srirangam Mohana Rangan, Chennai
Copyright: 29 March 2002:- Tamil Heritage Foundation.

WARNING :
Contents of this web site are free for personal use and for research and education purposes only.


Designed by: Suba:- Copyright THF