சில்லென்று அழையேல்!

திருப்பாவை அனைத்தையும் எழுச்சி கீதங்கள் என்றால் அது மிகையல்ல. தூங்கும் அனைத்தையும் அன்பாய், இதமாய் எழுப்பும் கீதங்கள் இவை. நாச்சியாரின் பரி பக்குவம் இங்குதான் தெரிகிறது. வைணவ மரபில் அவள் திருவின் அவதாரமான ஆதித்தாய். தாய் தன் குழவியை எழுப்பும் பாங்குடன் நல் வார்த்தை சொல்லி, மெல்லமாக எழுப்புகிறாள் கோதைத்தாய். தூக்கிவாரிப் போடுமாறு எழுப்புவது பீதியைத் தரவல்லது. அது எவ்விதத்திலும் நல்லதல்ல. அதனால்தான், தூங்கும் சிறார்களை எல்லே, இளங்கிளியே! என்றும், செல்வச் சிறுமீர்காள் என்றும், மாமன் மகளே என்று முறை சொல்லியும், குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற் கொடியே என்றும், நந்தகோபனை - எம்பெருமான் நந்தகோபாலா என்றும், யசோதையை எம்பெருமாட்டி என்றும், செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா என்றும், நப்பின்னையை கந்தம் கமழும் குழலீ! மைத்தடம் கண்ணினாய்! என்றும், நம் கண்ணனை வெப்பம் கொடுக்கும் விமலா! கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்றும் குழையக் குழையச் சொல்கிறாள். வாசிக்கும்போதே இதமாக இருக்கிறது.

பாவைப் பெண்டிர் என்பவர் யார்? "வையத்து வாழ்வீர்காள்" என்று கோடி காட்டுகிறாள், ஆண்டாள்! பாவைப்பெண்டிர் நாம்தான்! சிறுவர், சிறுமியர், மாமன், மைத்துனன், செல்வப் பெண்டாட்டி, மணாளன், அப்பா,அம்மா என்று யாரை விட்டாள் கோதை? ஒருவர் விடாமல் எல்லோரையும் இதமாக எழுப்புகிறாள்.

இந்த எழுச்சி எதற்காக? தூக்கத்திலிருந்து விழிக்கத்தான்! என்ன தூக்கம்? அறியாமை என்ற தூக்கம்தான். பின்வரும் பாசுரத்தைப் படியுங்கள்.

எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின், நங்கையீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(திருப்பாவை-15)

என்ன இன்னும் உறக்கம்? விழிக்க வில்லையா? கேட்டால் ஆயிரம் காரணங்கள்[கட்டுக்கோப்பானபதில்கள்(கட்டுரைகள்)] சொல்லுவாய்! நீ வல்லீ (பலமுடையவள்)! கொஞ்ச நேரமாவது என்னைப் போல் ஆகி நின்றால் என்ன? எல்லோரும் விரைவாக (ஒல்லை நீ போதாய்) போங்கள். போய் எண்ணிக்கொள்ளுங்கள் - வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனை! எம் பாவையரே!

இது வெளிப்படையான விளக்கம். இதுக்குப் போயா, திருப்பாவையை கோயிலில் வைத்து கும்பிடவேண்டும்? வல்லானை கொல்பவன், மாற்றழிக்க வல்லவன் இவனைப் போய் நாம் ஏன் கும்பிட வேண்டும்?இப்படித்தான் கேள்வி வரும், மேலோட்டமாக ஆண்டாளைப் புரிந்து கொண்டால். ஆனால் இப்பாடல் முழுவதும் உருவகம் நிரம்பியது.

தமிழ் மறை. மறைவான பொருள் கொண்டதால் மறை!

மானுடம் முழுதும் அறியாமை என்னும் துயிலில் (உறங்கிக்) கிடக்கிறது. தான் யார் என்பது புரியாமல்,வெறும் சமூகம் தரும் பெயர், சாதி, பட்டம் இவைதான் தான் என்று நம்பிக் கொண்டு, பட்டத்திற்காகவும், சாதிக்காகவும், பெயர்களுக்காகவும் வெட்டி சாய்த்துக் கொண்டு ஒரு மடமையான வாழ்வை நடத்திக் கொண்டுள்ளது மானுடம். இதுதான் நம் அறியாமை.

இது தூக்கத்தை போன்று வலுவுள்ளது. யாருக்குத்தான் தூக்கத்திலிருந்து விழிக்க மனம் வருகிறது? விழிப்பு என்பது மாறும் நிலை. மத, மதப்பு போய் சுறு,சுறுப்பாய் இருக்க வேண்டிய நிலை. மாற்றங்கள் எப்போதும் வரவேற்கப் படுவதில்லை. சாதீயத்தை எதிர்த்து ஆன்மீகம் எவ்வளவு முயன்றிருக்கிறது. ஆதிக்க சக்திகள் இதற்கு அசையவில்லை. மானுடத்தின் 50% சதவிகிதமாய் நிற்கும் பெண்ணின் விடுதலைக்காய் பாடிய கவிகள் எத்தனை. யாரும் கிஞ்சித்தும் மாறுவதாகத் தெரியவில்லை. மனித நேயத்தை வலியுறுத்தி சன்மார்க்க சங்கங்கள் எத்தனை தோன்றின மண்ணில். எதுவும் உறங்கும் மனிதனை எழுப்ப சக்தியில்லாமல் இருக்கின்றன.

நம் உறக்கம் எத்தகையது? ஆண்டாள் வரியில், "ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ (தூங்குமூஞ்சி), ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?"

அதுதான் நிலமை! மந்திரப் பட்டுப் போயிருக்கிறோம். மந்திரங்கள் என்னென்ன?

சமூகம் தரும் பெயர்கள். பிச்சை, மண்ணாங்கட்டி, கட்டாரி இவை மானிடப் பெயர்கள். அவர்கள் அவ்வாறே நடத்தப்படுகிறார்கள். இந்த மந்திரத்தில் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறது சமூகம்.

சாதி! பிறவியினால் இன்ன சாதி என்று சொல்லிவிடுகிறார்கள். மந்திரத்திற்கு கட்டுண்டவர் போல் வாழ்நாள்பூராவும் அதையே நம்பிக் கொண்டு 97 கோடி மக்கள்! பட்டங்கள், பதவிகள் கொடுத்து கெளரவிக்கிறார்கள். அப்பதவிக்காகவும் , பட்டத்திற்காகவும் கொலைகளும், ஊழலும் செய்து வாழ்கிறான்மனிதன். எத்தகைய மந்திரம் இது! இதுதான் ஆண்டாள் சொல்லும் ஏமப் பெருந்துயில்.

இதிலிருந்து நமக்கு எழுச்சி வேண்டாமா? என்றாவது யோசித்தது உண்டா? தானாக எழும்பாவிட்டால் யாராவது எழுப்பக் கூடாதா? கோதைத்தாய் அதைத்தான் இதமாய் செய்கிறாள். பாசுரங்களை வாசியுங்கள்.

"எல்லே இளங்கிளியே" என்று தொடங்கும் பாடல் கவித்தன்மையாலும், பொருள் வளத்தாலும் சிறந்து நிற்கிறது. இன்னும் உறங்குதையோ? சில்லென்று அழையேன்மின்! என்கிறாள் கோதை. சில்லென்று அழைப்பது எப்படி?

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதிலே" என்றான் மகாகவி பாரதி. தேன் வந்து "காதில்" பாய்ந்தால் இனிக்குமா என்ன? "சில்லென்று" அழை என்கிறாள்ஆண்டாள்! தூக்கத்தை கலைக்க சில்லென்று தண்ணீர் அடித்தால் தகும். ஆனால் இதத் தாயான கோதை, அந்த வருத்தத்தைக் கூடத் தராமல், சில்லென்று அழைத்தால் போதுமென்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள்! இதற்கு பல அர்த்தங்கள் தரலாம்! வல்லமையான கட்டுரைகள். பதில்கள் என்று ஒருபொருள். வல்லை என்றால் காடு, கோட்டை என்றும் பொருள் உண்டு. நாம் யார் என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் மிக கட்டுக் கோப்பான, வலுவான எண்ணங்கள் கொண்டுள்ளோம்.அதையேதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.

கட்டுரைகள் என்பதை நாம் நம்மைப் பற்றி கொண்டுள்ள அறிவு என்றும் கொள்ளலாம். வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்! இது புதியவிஷயமல்ல. பண்டை நாள் தொட்டு மனிதன் இப்படித்தான் அடையாளம் தவறிப் போய் உள்ளான் என்றும் பொருள் கொள்ளலாம்!

இது கல்வி என்றநிறுவனத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். தற்போது பிரபலமாக உள்ள மேலைக் கல்வி முறையில்"தான்" என்ற அடையாளத்தை குறித்துதான் அனைத்து கல்வியும் உள்ளது. நடைமுறையிலுள்ள முதலாளித்துவ அமைப்பில் மனிதனது சுய நலம் மிகவும் ஜாக்கிரதையுடன் பாதுகாக்கப் படுகிறது. பண்டைய இந்தியக் கல்வியில் மனிதனது "உண்மையான அடையாளத்தை" தேடும் பாங்கு நிறைய இருந்தது. மனிதனது உண்மையான அடையாளம் அவனது உறவுகளில் உள்ளது. தன்னுடன், தன் சுற்றத்துடன், தன் சூழலுடன், தன்னுள் உறையும் இறைமையுடன் அவன் கொள்ளும் உறவின் புரிதலில் உள்ளது அவனது உண்மையான அடையாளம். இதைத்தான்ஆண்டாள் "விழித்துப் பார்" என்கிறாள். நம் வல்லமையான கட்டுரைகள் இதைப் பற்றி இருக்க வேண்டும்என்று ஆசைப்படுகிறாள். இப்புரிதல் வரும் போது "தான்" என்ற ஈகோ அழிந்து "நாம்" என்ற பன்மைஉணர் வு வரும். எதிலும், எல்லாவற்றிலும் இறைமையைக் காணும் தெளிவு வரும். இதைத்தான் கோதைத்தாய்,"வல்லீர்கள் நீங்களே, நானேதானாகிடுக!" என்கிறாள். இந்த "நான்" பிரபஞ்ச ஒருமை! இதில் எல்லாம் அடங்குகிறது!

இதை அறிய விரையாயோ? என விரைவு படுத்துகிறாள். வல்லானைக் கொல்பவன் யார்? வல்லான் யார்?இப்போது புரிந்திருக்கும், வல்லான் என்பவன் வேறு யாருமல்ல, அது நம் மனம்தான் என்பது. இந்த வல்லானை வெல்லும் திறன் இறைவனுக்குத்தான் உண்டு (இதையும் உருவகமாகக் கொள்க. இங்கு இறைவன் "புரிதலாக" நிற்கிறான்). இவன் எப்பேர் பட்டவன்? மாற்றாரை மாற்றழிக்க வல்லவன்! தான்தான் தன் பெயரும்,சாதியும், பட்டமும், பதவியும் என்று இருக்கும் மாற்றானை (அதாவது, நம்மை) மாற்றழிக்க வல்லவன்.

"வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்."

இவன் வல்லான், மாற்றழிக்க வல்லான் மற்றும் "மாயன்"! திருமாலுக்கு மாயோன் என்பது பண்டையப் பெயர்."மாயோன் மேய காடுற உலகமும்" என்பது பரிபாடல். உலகு உருவாகும் போது அதன் ஒரு அங்கமாக மாயையையும் வருகிறது.

இதை நவீன வாக்கில் சொல்ல வேண்டுமெனில் பரிணாமத்தில் வளர்ச்சி என்று கணக்கிடப்படுவதே உயிர்களின் நரம்பியல் வளர்ச்சிதான். அது மனித இனத்தில்தான் உச்சமுறுகிறது. நரம்பு "மண்டலமாகும்"(complexity) போது தன்னிச்சையாக அது "தான்" (ஈகோ) என்ற உணர்வையும் மனிதனிடத்தில் உருவாக்குகிறது. இந்த "தான்" க்கு இயற்பியல் ரீதியில் பொருள் பரிமாணம் கிடையாது. இது மாயையான ஒன்று. இல்லாத ஒன்று இருப்பது போன்ற பிரமையைக் கொடுக்கும். (யாராவது ஈகோவைக் கண்டதுண்டோ ?). பிறப்பில் உள்ள இந்த மாயையை அறிந்து கொள்பவர்கள் இறைவனைக் கண்டு கொண்டதுபோல் ஆகும். இந்த மாயையைக் களைய உதவுவதால் அவன் மாயன் ஆகிறான். மாயமாய் உருவானது மாயமாய் அறியப் படுகிறது. இதைத்தான் மாணிக்கவாசகர் , "அவனருளால் அவன் தாள் வணங்கி" என்கிறார். இந்தமாற்றத்தை நம்முள் கொண்டு வருபவன் அவனே. அது ஒரு மாயச் செயல்தான்! அதனால் அவன் மாயன்!

இந்த மாயம் நடந்த பின், "உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகு நீர்" இவைகூட கண்ணன் உருவமாய்தெரியும்! வெற்றிலையே கண்ணனாகத் தெரியும் போது சக மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லே, இளங்கிளியே! என மதுரமாய் அழைக்கிறாள், மானுட மேன்மைக்கு! விழித்தெழுவோம் தோழர்களே!

நா.கண்ணன்
முதுசொம் இசையரங்கு