Home சமீபத்திய செய்திகள் “திணை” இதழ் 33 [ஜூலை — 2023] காலாண்டிதழ் வெளியீடு

“திணை” இதழ் 33 [ஜூலை — 2023] காலாண்டிதழ் வெளியீடு

by Tamil Heritage Foundation
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னிதழ் —“திணை” இதழ் 33 [ஜூலை — 2023] காலாண்டிதழ் வெளியீடு

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு வெளியிடும் காலாண்டு மின்னிதழ்…“திணை”.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஓர் அங்கமாக நமது “திணை” காலாண்டு மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளும் ஆய்வுக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்படுவதுடன், தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள், நூல்கள், நிகழ்ச்சிகள் ஆகிய பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய வகையிலும் “திணை” காலாண்டிதழில் தொகுக்கப்படுகின்றது.

காலாண்டிதழ் வரிசையில் இந்த 33 ஆவது இதழும் பொதுமக்கள் வாசிப்புக்காக வழக்கம் போல விலையின்றி வழங்கப்படுகின்றது என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
“திணை” இதழ் 33 [ஜூலை — 2023]

ஆசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
பொறுப்பாசிரியர் : முனைவர் தேமொழி
இணை பொறுப்பாசிரியர் : குமரன் சுப்ரமணியன்

வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர் தேமொழி
செயலாளர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


உள்ளடக்கம்

தலையங்கம்
— முனைவர் க. சுபாஷிணி 5
மலையும் தமிழும்! — சங்க இலக்கியக் கருத்தியல்கள்
— ஆர்.பாலகிருஷ்ணன் 9
அன்பின் ஐந்திணை – குறிஞ்சி
— முனைவர் தேமொழி 34
தமிழ் அழகியல்: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி 52
யாழ்ப்பாணத்தவர் வாழ்வியலில் மாட்டுவண்டில்: திறனாய்வு
— முனைவர் மு. இறைவாணி 59
ரிக்வேத சமூகம் – ஒரு பார்வை: நூல் திறனாய்வு
— முனைவர் க. சுபாஷிணி 68
தமிழகத்தில் பௌத்தம்: நூல் திறனாய்வு
— முனைவர் ஜம்புலிங்கம் 83
அண்மையில் வெளியான அயலகத் தொல்லியல் செய்திகள்
— முனைவர் க. சுபாஷிணி 88
வடமொழியில் திராவிடச் சொற்கள்
— முனைவர் ஒளவை அருள் 93
இலக்கியச் சிந்தனை
— குமரன் சுப்ரமணியன் 100
சிந்தனையாளர் வே. ஆனைமுத்து
— முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி 102
இலங்கை பயணக் குறிப்புகள்
— முனைவர் மு. பாமா 107
யானைகள் நமது காடுகளின் காவலர்கள்
— பேரா. முனைவர். நா.கண்ணன் 130
கர்னூலில் காணப்படும் பாறை ஓவியங்கள்
— முனைவர் மு. பாமா 137
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
— ஏப்ரல் 1, 2023 — ஜூன் 30, 2023 நிகழ்வுகள் 142


தலையங்கம்

— முனைவர் க. சுபாஷிணி

வணக்கம்.

நமது உலகம் வரலாற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளின் புரிதல் நிகழ்காலத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டங்களை நமக்கு வழங்குகிறது. வரலாற்றைப் படிப்பதும், தெரிந்து கொள்வதும், நாம் வாழும் சூழலையும், சமூகங்கள் தொடர்பான பார்வையையும், இவ்வுலகில் நடந்த மாற்றங்களையும். வளர்ச்சியையும் மேம்பாடுகளையும்  புரிந்து கொள்ள மனிதக்குலத்திற்குத் தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் உலக நாடுகளின் ஏதோ ஓர் இடத்தில் வரலாற்றின் பண்டைய சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவை மனிதக் குலத்தின் நம்பிக்கைச் சார்ந்த கருத்துகளை மையப்படுத்தியதாகவோ, ஈமக்கிரியைச் சார்ந்த சின்னங்களாகவோ, போர் வெற்றியை வெளிப்படுத்துவதாகவோ, இயற்கை பேரழிவை வெளிப்படுத்துவதாகவோ என பல கோணங்களில் அமைகின்றது.

வரலாற்று ஆய்வுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது அகழாய்வுகள் எனலாம். அகழாய்வுகள் புதிய  கண்டுபிடிப்புகளை ஆய்வுலகத்திற்கு வழங்குவதன் வழி வரலாற்றின் விடுபட்ட புள்ளிகளைக் கண்டுபிடிக்க வரலாற்றாய்வாளர்களுக்கு உதவுகின்றன. மரபணு ஆய்வுகள் என்பது கடந்த சில பத்தாண்டுகளில் உலகளாவிய அளவில்  பெரும் வளர்ச்சி கண்டுவரும் ஓர் ஆய்வாகத் திகழ்கின்றது. மனித இனம் என்பது ஹோமோ சேப்பியன்கள் மட்டுமல்ல … மாறாக ஹோமோ இரெக்டஸ், நியாண்டெர்தால், ஹைடெல்பெர்கென்சிஸ், ஸ்டைம்ஹைம்னிஸ் இன்னும் பல என விரிவாகிக் கொண்டே வருகின்றது. புதிய மனித இனங்களும் இந்த உலகில் வாழ்ந்து மறைந்து போயிருக்கின்றன என்பதையும் மரபணு ஆய்வுகள் ஆச்சரியப்படும் வகையில் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

வரலாற்று ஆய்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை வழங்க வேண்டும், முறையாக ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒரு உலகளாவிய நிறுவனமாகத் திகழ்கிறது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. அந்த வகையில், இவ்வாண்டு மரபணு ஆய்வுகள் தொடர்பான கண்டுபிடிப்புக்களை ஆய்வு மாணவர்கள், பொதுமக்கள் என் பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மதுரையில் ஓர் ஆய்வுக் கருத்தரங்கை இவ்வாண்டு ஏப்ரல் மாத இறுதியில் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் வெற்றி பொதுமக்களுக்கு வரலாற்றை முறையாக அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது என்பதை  வெளிப்படும் வகையில் அமைந்தது. அதன் அடிப்படையில் வருகின்ற காலங்களில் மேலும் விரிவாக இத்தகைய கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்து நிகழ்த்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஆர்வத்துடன் உள்ளோம் என்பதால்  இணைந்து செயல்பட ஆர்வம் உள்ள அமைப்புகளோ கல்லூரிகளோ பல்கலைக்கழகங்களோ தமிழ் மரபு அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மதுரையில் தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடுகளை விரிவாக்கும் வகையில் இவ்வாண்டு மதுரைக் கிளை உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் சார்ந்த செயல்பாடுகள், மதுரை மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் வரலாற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இக்குழுவின் செயல்பாடுகள் அமையும்.

தமிழ்நாட்டிற்கு வெளியே இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை ஒன்று 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகள் முடங்கிக்கிடந்த நிலையில் அதனை மீண்டும் செயல்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அண்மையில் தொடங்கப்பட்டன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கப்பட்ட ‘அகம் புறம்’ கண்காட்சி மே மாதம் 7ஆம் தேதி நிறைவு பெற்றது. உலகளாவிய அளவில்  தமிழின் சங்ககாலப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு வகையில் வரலாற்று ஆர்வலர்களுக்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் பல செயல்பாடுகளையும்  நிகழ்ச்சிகளையும்  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.   தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கும்  வரலாற்றுப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுங்கள். உங்களை அன்புடன்  வரவேற்கின்றது  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு.

தமிழால் இணைவோம்!

அன்புடன்

முனைவர் க சுபாஷினி

தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.