பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரிந்துரை பட்டியலில் முதலிடம் பெற்ற தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வலைப் பக்கங்கள்
ஒரு பல்கலைக்கழகத்துக்கு இணையான அத்தனை தரவுகள் நமது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வலைப் பக்கத்தில் உள்ளன. ஆய்வுப் பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பொது மக்களும் இவற்றை தங்கள் அறிவுத் தேடலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்துமே இலவசமாக வழங்கியிருக்கின்றோம். ஏறக்குறைய 20 ஆண்டுக்கால உழைப்பு.
தரமான நமது வலைப்பக்கம் கல்வியாளர்களையும் பேராசிரியர்களையும் மாணவர்களையும் சென்றடைய அவற்றைப் பல்கலைக்கழக பட்டியலில் முதலிடத்தில் வைத்து நமக்கு அங்கீகாரமும் பெருமையும் வழங்கிய தமிழக அரசின் கல்வித் துறைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
// தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பாப்பாவின் பதிவு.
இன்று எங்கள் கல்லூரியில் பாடத்திட்டங்களுக்கான குழுக்கூட்டம் (Academic board) நடந்தது. இப்பொழுது தமிழ்நாடு அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் (சமச்சீர்க் கல்வி) என்பதைப் போல அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதை இந்த வருடத்திலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. பாடத்திட்டத்தில் யாருக்கு எந்தப் பாடத்தைக் கொடுப்பது இப்படி எல்லாம் நிறைய குழப்பங்கள் – எதையுமே துவங்கும் பொழுது சில குழப்பங்கள் இருக்கத்தானே செய்யும் அதைப்போல. நாங்கள் குறிப்பாக நான் இன்று தான் அந்தப் பாடத்திட்டத்தைப் பார்த்தேன். என் பக்கத்தில் இறைவாணியும் இருந்தார். ஒவ்வொரு பாடத்திற்கும் முடிவில் பார்வை நூல்கள், பாட , இணையதள முகவரிகள் நிறைய கொடுக்கப்பட்டிருந்தன. பெரும்பான்மையான பாடங்களின் முடிவில் கொடுக்கப்பட்டிருந்த இணையதள முகவரியில் முதலில் இருந்தது நமது Thf இணையதளம்தான். எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சியும் சந்தேகமும். நம்முடையது தானா என்று வேகமாக அந்த இணையதள முகவரியைக் கூகுளில் பார்த்தோம். நம்முடைய இணையதள முகவரிதான். இருவருக்கும் அந்த நேரத்தில் மிகுதியான மகிழ்ச்சி. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதள முகவரி என்பதில் இன்னும் சந்தோஷமாக இருந்தது.//