Home சிறப்பு பக்கங்கள் ஆபில் காபில் தர்ஹா – ராமநாதபுரம் வட்டாரம் வரலாறு

ஆபில் காபில் தர்ஹா – ராமநாதபுரம் வட்டாரம் வரலாறு

தமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் நகரின் தென்பகுதியில் ரயில் நிலையத்திற்கருகில் உள்ளது ஆபில் காபில் தர்ஹா. மானுட குலத்தின் ஆதிபிதாவாகிய ஆதம் (அலை) அவர்களுக்கும் ஹவ்வா அம்மையாருக்கும் பிறந்த ஆபில், காபில் சகோதரர்கள் இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. கிழக்கு, மேற்காக நாற்பது அடி (40 அடி) நீளத்தில் அமைக்கப்பெற்று இங்குக் காணப்படும் இரண்டு சமாதிகள் ஆபில் காபில் என்பவர்களுக்கு உடையவை என்று பலப் பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகின்றன.

by Tamil Heritage Foundation
0 comment

ஆபில் காபிலைக் குறித்த செய்திகள் கிறிஸ்தவ சமய மறைநூல் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், இஸ்லாமியர்களின் இறைமறை திருக்குர்ஆனிலும் காணக்கிடைக்கின்றன.

எனினும் அவர்கள் இங்கே எப்பொழுது வந்தார்கள், ஏன் இங்கே அட​க்கம் செய்யப்பெ​ற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆயினும் இராமேஸ்வரத்தின் பூர்வக்குடிகளான மரைக்காயர் குடும்பத்தவர்க்கு​த்​ தொன்று தொட்டு நம்பிக்கைச் சின்னமாகவே இத்தர்ஹா இருந்து வருகிறது. இவர்கள் தங்கள் குடும்பத்து மணமக்களை முதன்முதலாக அழைத்து வருவது தர்ஹாவிற்குத்தான்! குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் கழிந்ததும் முதன் முதலாகக் குழந்தையைத் தூக்கி வருவதும் தர்ஹாவிற்குத்தான். மரைக்காயர்களை அடியொற்றிய இராமேஸ்வரம் வாழ் இஸ்லாமியப் பெருங்குடி மக்களும் தங்கள் குடும்பத்து நிகழ்வுகளிலும் முதன்மைப்படுத்துவது தர்ஹாவையே!

இந்த தர்ஹா குறித்த செவிவழிச் செய்தி இது. ஆபிலும் காபிலும் சண்டையிட்ட காரணத்தால் ஒருவர் உயிரிழக்கச் செய்வதறியாது திகைக்கிறார் மற்றவர்! அப்போது காகங்கள் இரண்டு அடித்துக் கொண்டு கீழே விழுகின்றன. ஒன்று இறக்க மற்றதோ அதை அடக்கம் பண்ணும் பணியில் ஈடுபடுகின்றது.

பரபரவென்று மண்ணில் குழிபறித்து வைத்துவிட்டுப் பறந்து சென்று தன் அலகினால் நீரை முகந்து வந்து காலமாகிவிட்ட காகத்தைக் கழுவிக் குளிப்பாட்டியது. சிறு துணியைப் பொறுக்கி வந்து அதன்மேல் மரித்த காகத்தை மண்ணுக்குள் வைத்து அள்ளி மேலே போட்டு மூடிவிட்டு மனதில் சுமையோடும் கண்களில் நீரோடும் பறந்து சென்றது.

இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பாபில் அக்காகத்தைப் பின்பற்றி இறந்துவிட்ட ஆபிலைக் குளிப்பாட்டி துணி போர்த்தி​த்​

தொழுது அடக்கம் செய்கிறார்! சிலகாலம் அங்கேயே சுற்றி அலைந்து அவரும் மறைந்து போனார்.

கடற்கரையில் ஒரு நாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனின் கையில் தட்டுப்படுகிறது தெய்வத்திருமேனி ஒன்று! சிறுவன் அத்தெய்வ விக்கிரகத்தை ஆராதித்தான்! அன்பால் பூஜித்தான்! காலம் கண்டெடுத்த தெய்வத்தை மக்கள் கூட்டத்தைக் கூட்டிவந்து வழிபட வைத்தது. சிறு கோயில் எழுந்தது, பெரிதாகவும் வளர்ந்து கொண்டு இருந்தது.

பூர்வக்குடியினரான மரைக்காயர் உறங்கும்போது கனவொன்று காண்கிறார். ‘தற்போது கோயில் எழுந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அண்மையிலேயே அடங்கப் பெற்றவர்கள் ஆபிலும் காபிலுமாகிய நாங்கள்! ஊருக்குப் புறத்தே குடிகொள்ள விழைகிறோம்! தெற்குக் கோடியில் உங்கள் தோப்புக்கருகில் எலுமிச்சம் பழங்கள் காணக்கிடைக்கும் அவ்விடத்திலேயே நாங்கள் அடக்கமாகிறோம்‘ என்றார்கள்.

அதிகாலை எழுந்து அவர் விரைந்தோடிச் சென்று பார்க்க தலைமாட்டுக்கும் கால்மாட்டுக்குமாய் 40 அடி நீள அளவில் எலுமிச்சம்பழங்கள் தட்டுப்படுகின்றன. அந்த அளவிலேயே சமாதிகள் அமைக்கிறார். மேற்கூரை அமைத்து தர்ஹா ஏற்படுகிறது. இராமநாதசுவாமி கோயிலில் ஆபில்காபில் நினைவில் தங்கக் கொடிமரம் காட்சி தருகிறது.

மதநல்லிணக்கம் பேணிய மண்ணின் மைந்தர்கள் மனமுவந்து உலவவிட்ட செய்திகளாக இருக்கலாம்!

திருக்குர்ஆனில் ‘அல்லாஹ்‘ ஒரு காகத்தை அனுப்பினார். அது பூமியைத் தோண்டிற்று. அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக என்று பாகம்:6, அத்தியாயம்:5 அல்மாயிதா எனும் தலைப்பின் கீழ் அமையும் வசனம் ஆபிலும் காபிலும் ஆதிபிதா ஆதமின் மக்கள் என்பதையும் அவர்கள் மரித்து அடங்கப்பெற்ற விபரத்தையும் எடுத்துரைக்கின்றது!

இத்திருவசனத்தின் வாயிலாக ஆபில் காபில் சமாதிகள் காணக்கூடியதே என்பதும் பெறப்படுகின்றது.

ஆபில் காபில் தர்ஹாவைக் காண்பதற்கென்று தமிழகமெங்குமிருந்து தினந்தோறும் மக்கள் வந்து செல்கிறார்கள். இன்றளவும் சர்வ சமயத்தவரும் நேர்த்திக்கடன் வைத்து வழிபடும் புனித இடமாகவே இந்த தர்ஹா இருந்து வருகிறது.

இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்து மன்னர் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி இந்தப் புனித இடத்தின் பராமரிப்புக்கென்று இராமநாதபுரத்தை அடுத்த புதுக்குளம் (எக்ககுடி) என்ற கிராமத்தை கி.பி.1744இல் சர்வ மானியமாக வழங்கி யுள்ளதற்கான செப்புப்பட்டயம் உள்ளது……

 

களப்பணியாளர்

மு.தணிகை ராஜா

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

Copyrights © 2022 – Tamil Heritage Foundation International. All rights reserved.