Thursday 26th of April 2018

Home வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 35. உமறுப் புலவர் மணிமண்டபம்
35. உமறுப் புலவர் மணிமண்டபம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Tuesday, 23 November 2010 20:08

Nov 21, 2010 

 

35. உமறுப் புலவர் மணிமண்டபம்
 
கடந்த ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடுகளில் உமறுப் புலவர் சரிதை என்ற ஒரு நூலும் இடம் பெற்றது. இது நமது சேகரத்தில் 148வது நூலாக உள்ளது. செய்யுளும் உரைநடையுமாக அமைந்த இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கத்திற்காக வழங்கியிருந்தார் திருமதி.சீதாலக்ஷ்மி அவர்கள். தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்ற போது அவர் தமது வாசிப்புக்காக எடுத்துச் சென்ற நூல்களில் இதுவும் ஒன்று. தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப் பணிகள் தொடர்பான கலந்துரையாடல்களின் போது இந்த நூலைப் பற்றி அவர் தெரிவிக்கவும் இதனையும் மின்னாக்கம் செய்து பொது மக்கள் வாசிப்பிற்கு வழங்க வேண்டும் என திட்டமிட்டோம்.
 
நூலை நான் மின்னக்கம் செய்து தருகின்றேன். எனது இல்ல முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று சீத்தாம்மாவைக் கேட்ட உடன் எனக்கு தபாலில் இந்த நூலை அனுப்பி வைத்தார்கள். இந்த நூல் மின்னாக்கம் செய்யப்பட்டு 10.10.2009 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இணைக்கப்பட்ட செய்தியை மின்தமிழில் அறிவித்திருந்தேன்.  மின்னூலக்கத்திற்குப் பின்னர் இந்த நூலை உமறுப் புலவர் சமாதியை மேற்பார்வை செய்து வருபவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சீத்தாம்மாவின் விருப்பம். எனது எட்டயபுரத்துக்கான பயணம் டிசம்பர் ஆரம்பத்தில் என உறுதியானவுடன் நானே நேரடியாக அவர்களிடம் ஒப்படைத்து விடுவதாக உறுதி கூறியிருந்தேன்.
 
எட்டயபுரத்தில் சில மணி நேரங்கள் அரண்மனையைச் சுற்றிப் பார்த்து பதிவுகள் செய்து கொண்ட பின்னர் நேராக உமறுப் புலவர் சமாதி இருக்கும் இடம் நோக்கி  புறப்பட்டோம். என்னுடன் இப்பொழுது திரு.கருணாகர பாண்டியனும் அவருடன் மதுரையிலிருந்து வந்திருந்த மற்றொரு நண்பரும் உடன் இருந்தனர். இந்த இடம் அரண்மனையிலிருந்து வெகு தூரமில்லை. சில குறுக்கு பாதைகளில் சென்று ஐந்தே நிமிடத்தில் உமறுப் புலவர் மணிமண்டபத்தை வந்தடைந்தோம். எனது கற்பனையில் இது ஒரு இல்லம் போல இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக ஒரு பள்ளி வாசல் போலவே இந்த நினைவு மண்டபம் அமைந்திருக்கின்றது. நாங்கள் முன் அறிவிப்பு ஏதும் தெரிவித்து விட்டு வரவில்லை. ஆனாலும் புத்தகத்தை சரியான நபரிடம் ஒப்படைக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. நாங்கள் சென்ற சமயத்தில் சிலர் அங்கிருந்தனர். 

 


 
 

 


சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு மணிமண்டபத்திற்குள் நுழைந்தோம்.  அழகான வடிமவமைப்பில் அமைந்த கட்டிடம்.

 


 
உமறுப் புலவர் 1642ம் ஆண்டு பிறந்தவர். எட்டயபுரத்து அரண்மனை சமஸ்தானக் கவிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது நூலாகிய சீறாப்புராணம் இலக்கிய கவித்துவச் சிறப்புடன் நோக்கப்படும் ஒரு நூல். உமறுப் புலவர் தமது இளம் வயதிலேயே தமது கவித்திறமையால் எல்லோரையும் கவர்ந்தவர். இவரது ஆசிரியரான கடிகை முத்துப் புலவரும் சமஸ்தானப் புலவர்களில் ஒருவரே. மத வேறு பாடுகள் இல்லாமல் அந்தக் காலகட்டத்தில் அரண்மனையில் புலவர்கள் சிறப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இவரும் ஒரு சான்று. உமறுப் புலவர் 1703ம் ஆண்டு மறைந்ததாக குறிப்புக்களில் காணலாம்.

 

உமறுப் புலவரின் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் சீத்தாம்மாவின் எண்ணங்கள் ஊர்வலம் கட்டுரைத் தொடரில் 11ம் பகுதியில் உமறுப் புலவர் பற்றிய குறிப்பில் மேலும் சில தகவல்களைப் பெறலாம். அத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை  சேகரத்தில் உள்ள உமறுப் புலவர் சரிதை நூல் இவர் சரித்திரத்தை முழுதும் அறிந்து கொள்ள உதவும்.

 


 
 


உமறுப் புலவர் சமாதி, முதலில் பிச்சைக் என்பவரால் 1912ம் ஆண்டு நினைவுச் சின்னமாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் 2007ம் ஆண்டு இந்தப் புதிய மணி மண்டபம் கட்டப்பட்டு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. உமறுப் புலவர் சரிதை நூலை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்குள்ளே நுழைந்தோம். பச்சை நிறத்திலான துணியைக் கொண்டு சமாதியை அலங்கரித்திருக்கின்றனர். தினம் அங்கு மக்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.


 
 


மணிமண்டபத்தின் உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு பேரிடம் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.  அதில் சற்று முதியவரான ஒருவரிடம் திரு.கருணாகர பாண்டியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது முன்னாளைய இஸ்லாமிய நண்பர் ஒருவரை காண முடியுமா எனக் கேட்டுக் கொண்டார். திரு.கருணாகர பாண்டியன் தேடிய நபரை உடனே அழைத்து வருவதாகக் கூறி ஒருவர் புறப்பட்டுச் சென்று சில நிமிடங்களில் அவருடன் வந்து சேர்ந்தார்.

 

நண்பர்கள் இருவரும் சந்தோஷமாக  அறிமுகம் செய்து கொண்ட பின்னர் என்னைப் பற்றியும் சீத்தாம்மா இந்த நூலை கொடுக்கச் சொல்லிருப்பது பற்றியும் திரு.கருணாகர பாண்டியன் சற்று விளக்கினார். உமறுப் புலவர் நினைவு மண்டபத்தின் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர் என தெரிய வரவே அவரிடமே இந்த நூலை ஒப்படைத்து அதனை உமறுப் புலவர் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டோம். 

 


 

இந்த நினைவு மண்டபத்திற்கு பொது மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மந்திரிக்க வருகின்றனர் என்ற விபரத்தையும் தெரிந்து கொண்டேன். குழந்தைகள் உடல் வருத்ததில் பாதிக்கப்பட்டிருந்தால் உமறுப் புலவரின் சமாதி உள்ள இந்த மணிமண்டபத்திற்கு குழந்தைகளைப் பெற்றோர்கள் அழைனத்து வருவார்களாம். இங்கு வந்து மந்திரித்துச் சென்றால் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை இருக்கின்றதாம். இப்படி வரும் குழந்தைகள் அல்லது நோயால் பாதிக்கபப்ட்டவருக்கு பூஜைக்கு வைத்துள்ள தண்ணீரைத் தெளித்து விட்டால் நோய் குணமாகும் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாக இருக்கின்றது.

 
 
 
 
இஸ்லாமியர்கள் மட்டுமன்றி ஹிந்துக்களும் கிறிஸ்துவர்களும் கூட தயக்கமின்றி சர்வ சாதாரணமாக தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டி இங்கு வந்து வழிபட்டு செல்வார்களாம். சிலர் பிரச்சனைகள் நீங்கியதன் ஞாபகார்த்தமாக தங்கள் குழந்தைகளுக்குக்கும் உமர் என்று பெயர் வைப்பதும் இங்கு வழக்கத்தில் இருக்கின்றது என்பதை இந்த இஸ்லாமிய நண்பர் திரு. அகமது ஜலால் அவர்களிடம் பேசிய போது அறிய முடிந்தது. 
 
 
திரு.அகமது ஜமால் இங்கு வருபவர்களைப் பற்றி விளக்குகின்றார்
 


அந்த மண்டபத்தை முழுதுமாகச் சுற்றிக் காண்பித்து அங்கு வந்து செல்வோர் பற்றியும் தொழுகை நடைபெறுவது பற்றியும் எங்களிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர் இந்த இஸ்லாமிய நண்பர்கள்.  அவர்களோடு சற்று நேரம் மேலும் பேசிக் கொண்டிருந்த பின்னர் அங்கிருந்து எங்கள் அடுத்த இலக்கை நோக்கிப் புறப்பட்டோம்.  எனது பட்டியலில் அடுத்து இருந்தது முத்துஸ்வாமி தீஷிதர்  நினைவு மண்டம். 
 
 

அன்புடன்
சுபா

Last Updated on Tuesday, 23 November 2010 20:27
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2018  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
        1
  2  3  4  5  6  7  8
  9101112131415
16171819202122
23242526272829
30      

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved